×

தி எக்ஸ்பாண்டபிள்ஸ் 4 – திரைவிமர்சனம்

டேவிட் கல்லாஹாம் உருவாக்கிய கதாபாத்திரங்களின் அடிப்படையில் எக்ஸ்பாண்டபிள்ஸ் முதன்முதலாக 2010 இல் வெளிவந்து மிகப்பெரிய வெற்றி பெற்றது. சில்வஸ்டர் ஸ்டாலோன் கதாநாயகனாக நடிக்க உடன் மாஸ் ஹாலிவுட் நடிகர்கள் பலரும் களமிறங்கிக் கலக்கிய இப்படத்திற்கு ரசிகர்கள் லைக் பட்டனை அழுத்தினர். தொடர்ந்து 2012ல் தி எக்ஸ்பாண்டபிள்ஸ் 2, 2014ல்தி எக்ஸ்பாண்டபிள்ஸ் 3, வெளி வந்து பிளாக் பஸ்டர் ஹிட்டடித்தது. இதோ இப்படத்தின் நான்காவது பாகம் ‘தி எக்ஸ்பாண்டபிள்ஸ் 4‘ திரைப்படம் வெளியாகியிருக்கிறது.

ஸ்காட் வாக் இயக்கத்தில் சில்வஸ்டர் ஸ்டாலோன், ஜேசன் ஸ்டேத்தம், டோனி ஜா, மில் கிப்சன், உள்ளிட்டப் பலர் நடிப்பில் வெளியாகியிருக்கிறது இந்த நான்காம் பாகத்தை ஜேஸன் ஸ்டேத்தம் தயாரிக்க உடன் லயன்ஸ் கேட் வெளியிடுகிறது. சுவார்டோ ரஹ்மத் (இகோ உவெய்ஸ்) என்பவன் அணு ஏவுகணைகளை லிபியாவின் இரசாயணக் கூடத்திலிருந்து கடத்திச் சென்று ஒரு பெரும் அரசியல் பணக்காரனிடம் விற்று பணம் சம்பாதிக்க திட்டமிடுகிறான். இந்தச் செயல் அமெரிக்கா மற்றும் ரஷ்யா ஆகிய இரு பெரும் நாடுகளுக்கிடையே போர் மூளும் அபாயத்தை உண்டாக்குகிறது.

இதனைத் தடுக்கும் பொறுப்புதான் ‘தி எக்ஸ்பாண்டபிள்ஸ்‘ குழுவினரிடம் வருகிறது. விளைவு என்ன என்பது ஆக்ஷன் அதிரடி கிளைமாக்ஸ். படத்தின் துவக்கத்திலேயே அமைதி அதன் பின் நிகழும் குண்டு வெடிப்புகள் என நம்மை சீட்டில் கட்டிப் போடுகிறார் ஸ்காட் வாக். படம் முழுக்க ஆக்ஷன், அதிரடி என எக்ஸ்பாண்டபிள்ஸ் ரசிகர்களுக்காகவே பார்த்து பார்த்து படத்தை இழைத்திருக்கிறார்கள். தொடர்ந்து நடக்கும் சரக்குக் கப்பல் சேஸிங்குகள், அதற்குள் நுழைய எடுக்கும் சாதுர்யங்கள், அங்கே நடக்கும் சண்டைக் காட்சிகள் என மாஸ் காட்டுகிறது படம். படத்திற்கு பக்க பலமாக டிம் மௌரிஸ்- ஜோன்ஸ் சினிமோட்டோகிராபி அருமையோ அருமை. மேலும் அதற்கு ஈடாக சவுண்ட் டிசைனிங் கல்லேம் ரௌஸ்ஸெல் பின்னணியும் தரம்.

எல்லாம் நன்றாக உள்ளது ஆனால் ஏற்கனவே முந்தைய பாகங்களில் அர்னால்டு, ஜெட்லி, புரூஸ் வில்லீஸ், என பல மாஸ் ஹீரோக்கள் படையெடுப்பதில் பெயர் போன ‘தி எக்ஸ்பாண்டபிள்ஸ்‘ சிறப்பம்சம் ஒவ்வொரு பாகத்திலும் அதன் ஆக்ஷன் ஹீரோக்களின் எண்ணிக்கையைக் குறைத்துக்கொண்டே வருவது படத்திற்கு சற்று சறுக்கலாகத் தென்படுகிறது. அடுத்தப் பாகங்களில் அதில் கவனம் செலுத்தினால் இந்தப் படத்தின் பாகங்களுக்கு எப்போதும் போல் மவுசு குறையாது. மொத்தத்தில் படம் முழுக்க மாஸ் ஹாலிவுட் நடிகர்கள் அணிவகுப்பார்கள் என நினைத்து சென்றால் எதிர்பார்ப்பு பூர்த்தியாவது கடினமே. ஆனால் அக்ஷன், எக்ஸ்பாண்டபிள்ஸ் மற்றும் சில்வஸ்டர் ஸ்டாலோன் விரும்பிகளுக்கு இந்தப் பாகமும் விருந்தாக அமையும்.

The post தி எக்ஸ்பாண்டபிள்ஸ் 4 – திரைவிமர்சனம் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : David Callaham ,Sylvester Stallone ,Hollywood ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED ரேசர் இயக்குனரின் கேங்ஸ்டர் படம்